டாஸ்மாக் கடை அருகே இல்லாததால் பால் சப்ளை போல் ‘சரக்கு’ சப்ளை பண்றாங்க மோலப்பாடியூர் பெண்கள் குமுறல்

திண்டுக்கல், மார்ச் 19: மோலப்பாடியூரில் வீடுகள்தோறும் பால் ஊற்றுவது போல மதுபாட்டில்கள் சப்ளை செய்வதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.வடமதுரை அருகே மோலப்பாடியூரை சேர்ந்த பெண்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் மனுவை வாங்கவில்லை. இதையடுத்து மனுவை புகார் பெட்டியில் போட்டு சென்றனர்.பின்னர் அவர்கள் கூறுகையில், ‘எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை இல்லை. வடமதுரை, தாமரைப்பாடிக்குத்தான் மது குடிக்க வந்தாக வேண்டும். இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு கும்பல் வீடுகள்தோறும் பால் ஊற்றுவது போல் மதுபாட்டில்களை விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் கெட்டுப்போய் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளிக்கும் பெண்கள் தாக்கப்படுகின்றனர். இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த சமூகவிரோத செயலுக்கு அவர்களும் துணைபோகின்றனர். மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்’ என்றனர்.

Related Stories: