×

சேத்துப்பட்டு அருகே பரிதாபம் தேர் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

சேத்துப்பட்டு, மார்ச் 19: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில், நேற்று நடந்த தேரோட்டத்தின் போது தேர் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், பங்குனி உத்திர பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதிஉலா வந்து அருள்பாலித்தனர். இந்நிலையில், தேர் திருவிழாவையொட்டி நேற்று மதியம் 3 மணியளவில் பெரியநாயகி அம்மன், கனக கிரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருத்தேரில் அமர்த்தப்பட்டனர். பின்னர், அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி சுந்தரம், செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் ரவி கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இந்நிலையில், தேர் புதுத்தெரு அருகே பவனி வரும்போது, தேவிகாபுரம் மகாராஜா பேட்டை தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி கஸ்தூரி(52) பக்தர்களுக்கு மோர் வினியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கஸ்தூரி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். அப்போது தேர்ச்சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர் கஸ்தூரியை உடனடியாக மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது சென்னையில் வசித்து வரும் ஏழுமலை குடும்பத்தினர், திருவிழாவிற்காக சொந்த கிராமத்திற்கு வந்தபோது நடந்த இந்த விபரீத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Tags : Periyanayaki Amman Temple Thermal ,poor ,
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...