×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர கற்தூணில் விரிசல்

* தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு * இயற்கை முறையில் சீரமைக்க நடவடிக்கை

திருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர பக்கவாட்டு தூணில் ஏற்பட்டுள்ள லேசான விரிசலை, தொழில்நுட்பக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இயற்கை முறையில் சீரமைக்கப்படும் என தெரிவித்தனர்.ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், உலகம் வியக்கும் கற்கோயில் கட்டுமான நுட்பங்களுக்கு சான்றாக திகழ்கிறது. இக்கோயிலின் நான்கு திசைகளிலும் பிரதான கோபுரங்களும், உட்பிரகாரங்களில் 5 சிறிய கோபுரங்களும் என நவ கோபுரங்களை கொண்ட சிறப்பு பெற்றுள்ளது.பல்வேறு மன்னர்களின் ஆட்சி காலங்களில், அண்ணாமலையார் கோயில் படிப்படியாக கட்டி முடிக்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு பிரகாரமும், ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புடன் அமைந்திருக்கிறது. ராஜ கோபுர உயரம் 217 அடி, பே கோபுரம் 144 அடி, அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி, திருமஞ்சன கோபுரம் 157 அடியாகும். நான்கு கோபுரங்களையொட்டி அமைந்துள்ள 4 கட்டை கோபுரங்களும் தலா 70 அடி உயரமாகும்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரம் எனப்படும் அம்மணி அம்மன் கோபுரத்தின் பக்கவாட்டு கற்தூணில், கொடிமங்கை சிலை அமைந்துள்ள பகுதியில் லேசான விரிசல் இருப்பது கடந்த 2002ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக திருப்பணியின்போது தெரியவந்தது.

தொடர்ந்து, அதனை சீரமைத்தனர். ஆனாலும், பக்கவாட்டு தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த விரிசலை சரி செய்யும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. அறநிலையத்துறை பொறியாளர் மற்றும் ஸ்தபதியை வரவழைத்து, நேரில் ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் கடந்த மாதம் முடிவு செய்தது.அதன்படி, அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயினி, தொல்லியல் துறை ஆய்வாளர் வசந்தி, கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் உள்ளிட்ட குழுவினர் நேற்று அம்மணி அம்மன் கோபுர கற்தூண் மற்றும் கொடி மங்கை சிற்பத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக சரி செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்ந்து, கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயினி கூறுகையில், `அம்மணி அம்மன் கோபுர பக்கவாட்டு தூணில் ஏற்பட்டுள்ள விரிசலால் கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும், இதனை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதன்படி, கடுக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி இந்த விரிசலை சரி செய்யப்படும்'' என்றார்.(கேப்சன்)திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர கொடிமங்கை சிலை அமைந்துள்ள கற்தூணில் ஏற்பட்டுள்ள விரிசலை, தொல்லியல் துறை அதிகாரி வசந்தி, இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகாயினி ஆகியோர் முதற்கட்ட ஆய்வு நடத்தினர், உடன் கோயில் இணை ஆணையர் ஞானசேகர்.கொடிமங்கை சிலை அமைந்துள்ள கற்தூணில் ஏற்பட்டுள்ள விரிசல்.

Tags : Thiruvannamalai Annamalaiyar ,Ammani Amman Kopura ,Krishna ,
× RELATED சரணாகதியே தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு