×

பழைய பஸ் நிலையம் பகுதியில் சிதிலமடைந்த நகராட்சி வணிக வளாக கட்டிடம்

கரூர், மார்ச் 19: சிதிலமடைந்த நகராட்சி வணிக வளாக கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வணிக வளாக கட்டிடம் உள்ளது. கரூர் மாவட்டம் உதயமானவுடன் ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி, பஞ்சாயத்து வளர்ச்சி போன்ற அலுவலகங்கள் இந்த நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் இயங்கி கொண்டிருந்தன. பின்னர் புதிய ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டவுடன் அரசு அலுவலகங்கள் அந்த இடத்திற்கு மாற்றப்பட்டன. அதன்பிறகு நகராட்சி நிர்வாகம் இந்த கட்டிடத்தை சரிவர பராமரிக்கவில்லை. இதனால் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது.
வணிக வளாக கட்டிடத்தில் நிறைய கடைகள் மற்றும் அலுவலக அறைகள் காலியாக கிடக்கின்றன. தற்போது உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் தனி அதிகாரிகள் பொறுப்பில் உள்ளாட்சி மன்ற நிர்வாகங்கள் செயல்படுகின்றன.

கரூர் உழவர்சந்தை இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ளது. சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. வாழை இலை, வெங்காயம், எலுமிச்சை போன்றவற்றை இதன் கீழ்புறம் அமர்ந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். காரை கற்கள் பெயர்ந்து அவர்கள் மீது விழுகிறது. உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மீதும் விழுந்து வருகிறது. இந்த இடத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே செல்கின்றனர். உழவர்சந்தையும், இந்த வணிக வளாக கட்டிடமும் நகராட்சி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. மேலும் கடைகளுக்கு வாடகை பாக்கி உள்ளது. அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். காலியாக உள்ள கடைகளையும் இடங்களையும் சீரமைத்து வாடகைக்கு விட வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. யாருக்கும் பயனின்றி அரசு சொத்து வீணாகி கொண்டிருக்கிறது. உழவர்சந்தை அருகே காய்கறி கடைகளை வைக்க கூடாது என்பது விதிமுறை. ஆனால் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளை போடுவது வாடிக்கையாகி விட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : shopping complex building ,bus station ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...