×

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற கோயில்களில் தம்பிதுரை திடீர் யாகம்

கரூர், மார்ச் 19: கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கரூர் வந்த தம்பிதுரை மூன்று முக்கிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் பாராளுமன்ற தொகுதியில் தம்பிதுரைக்கே திரும்பவும் அதிமுக சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கரூர் வந்த தம்பிதுரை தாந்தோணிமலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் கரூர் மாரியம்மன் கோயில் ஆகிய முக்கிய மூன்று கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, 8.40 மணியளவில் கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.ஏற்கனவே தம்பிதுரை தனக்கு சீட் கிடைக்க வேண்டி தஞ்சை பகுதியில் உள்ள கோயில்களில் யாகங்கள் நடத்தினார்.  அதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தம்பிதுரை மூன்று முக்கிய கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத்தான் தம்பிதுரை நீண்ட நாட்களுக்கு பிறகு கரூரில் உள்ள கோயில்களில் யாகமும் நடத்தினார் என கட்சியினர் பரவலாக பேசிக் கொண்டனர்.

Tags : Thambidurai ,constituency ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...