×

கலவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு அருகே பச்சிளங்குழந்தை வீச்சு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை


வேலூர், மார்ச் 19: ஆற்காடு அருகே கலவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு அருகில் பிறந்து இரண்டு மணி நேரத்திலேயே ஆண் பச்சிளங்குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு பின்புறம் நேற்று காலை 8 மணியளவில் நாய்கள் குரைத்தபடி ஒன்றையொன்று சண்டையிட்டு கொண்டிருந்ததையும், அந்த இடத்தில் காக்கைகள் கூட்டமாக பறந்து கொண்டிருந்ததையும் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அங்கு விரைந்து சென்றனர்.அங்கு சென்று பார்த்த போது, பிறந்து 2 மணி நேரமே ஆன, கண்கள் கூட திறக்காத நிலையில் ஆண் சிசு ஒன்று மருத்துவமனையின் தொப்புள் கொடியுடன் பச்சை கலர் துணியுடன் சுற்றி வீசப்பட்டிருந்தது. மேலும் குழந்தையின் உடலில் எறும்புகள் ஊர்ந்தபடி இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனை மருத்துவ அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது குழந்தை அபாயக்கட்டத்தை தாண்டி விட்டதாகவும், ஆனாலும், இன்குபேட்டரில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக மேலும் அவர்கள் கூறும்போது, ‘யாராவது இங்கு பிரசவத்துக்காக வந்தவர்கள் குழந்தை பிறந்தவுடன், இங்கு வீசிச் சென்றிருக்கலாம். இதுதொடர்பாக மருத்துவமனை பதிவேடுகளை ஆராய்ந்து வருகிறோம். தவறான வழியில் சென்று பிறந்ததால் இத்தகைய குரூர செயலை செய்திருக்கலாம்’ என்றனர்.

இந்நிலையில், ஆற்காடு தாசில்தார் வத்சலா, கலவை மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தையை பார்த்து, அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் கலவை போலீசார் வழக்குபதிவு செய்து பிறந்து 2 மணியே ஆன நிலையில் ஆண் பச்சிளங்குழந்தையை வீசிச் சென்ற கொடிய தாயை வலைவீசி தேடி வருகின்றனர்.இதற்கிடையில் கலவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பச்சிளங்குழந்தை சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : state hospital ,collapse ,mausoleum ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...