×

வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் காரில் எடுத்துச்சென்ற ₹2.80 லட்சம் சிக்கியது


வேலூர், மார்ச் 19: வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையில் காரில் கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத ₹2.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.குறிப்பாக பண நடமாட்டத்தை தடுக்கும்வகையில், முறையான ஆவணங்களுடன் ₹50 ஆயிரம் வரை பொதுமக்கள் தங்களது சொந்த தேவைக்காக கொண்டு செல்லலாம் என தெரிவித்தது. அதேபோல் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்த தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ரூபிபாய் தலைமையில் போலீசார் செல்வகுமார், ஏழுமலை, கலைவாணி ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்தவர் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்.

இதனால் சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படையினர் அவரை சோதனை செய்தனர். அதில் அவரது பேன்ட் பாக்கெட்டில் ₹2 லட்சத்து 80 ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காருடன் பணத்தை பறிமுதல் செய்து வேலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.பின்னர், நடத்திய விசாரணையில் அவர், காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரசாத்(47) என்பதும், குடியாத்தத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்க பணத்தை கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அப்போது முறையான ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினர். அதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ₹2.80 லட்சம் பணத்தை, தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்த தகவலை கலெக்டர் ராமனுக்கும் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்த்தனர். இதுவரை வேலூர் மாவட்டத்தில் ₹5 லட்சத்து 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Vellore Green Circle Service Road ,
× RELATED வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ்...