×

வேலூர் அடுத்த மேல்மொணவூரில் பரபரப்பு பாலாற்றில் மாட்டு வண்டிகளை நிறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மணல் குவாரி திறக்க வலியுறுத்தி நடந்தது

வேலூர், மார்ச் 19: வேலூர் அடுத்த மேல்மொணவூர் பாலாற்றில் மணல் குவாரி திறக்கக்கோரி மாட்டு வண்டிகளை நிறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர், காட்பாடி, அணைக்கட்டு பகுதிகளில் சுமார் 1200 மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி மேல்மொணவூர் பாலாற்றில் மணல் குவாரி திறக்கக் கோரி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் ராமனிடம் மனு அளித்தனர்.அதைத்தொடர்ந்து மேல்மொணவூர் பாலாற்றில் மணல் அள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குவாரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்டிஓ அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதில், தங்களுக்கு உத்தரவு கடிதம் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது.

இதனிடையே வேலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று மேல்மொணவூர் பாலாற்றில் மாட்டு வண்டிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயகுமார், பொருளாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், ரசீது போட்டு மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி மணல் குவாரி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம். கோரிக்கையின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vellore ,panchayat ,sand quarry demonstration ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...