×

பம்மல் நகராட்சி வார்டுகளில்போதிய தொட்டிகள் இல்லாததால் சாலையில் கொட்டப்படும் குப்பை

பல்லாவரம்: பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட சாலை, தெருக்களில் போதிய தொட்டிகள் வைக்கப்படாததால், பொதுமக்கள் சாலையில் குப்பையை கொட்டும் நிலை உள்ளது. அவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளையும் துப்புரவு ஊழியர்கள் முறையாக அகற்றாததால் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
பம்மல் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீடு மற்றும் கடைகளில் தினமும் சேகரமாகும் குப்பைகளை சாலையோரம் கொட்டி வருகின்றனர். இவ்வாறு குப்பை கொட்டும் இடங்களில் நகராட்சி நிர்வாகம் போதிய அளவில் குப்பைத் தொட்டிகளை வைக்கவில்லை.

இதனால், பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டிச் செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக பம்மல் நல்லதம்பி சாலை, சங்கர்கர் நகர் பிரதான சாலை, மூவேந்தர் நகர் மற்றும் எம்ஜிஆர் சாலை ஆகிய பகுதிகளில் குப்பை மலைபோல் தேங்கி காணப்படுகிறது. துப்புரவு ஊழியர்கள் இந்த குப்பையை முறையாக அகற்றாததால் நாள் கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் கடந்தாண்டு பரவியதைப் போன்று இந்த ஆண்டும் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் பகுதிவாசிகள் உள்ளனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் நாங்கள் செலுத்தும் வரியால், அரசுக்கு ஏராளமான தொகை வருவாயாக கிடைக்கிறது. ஆனால் மக்கள் நலத் திட்டப்பணிகள் மட்டும் ஏனோ முறையாக மக்களுக்கு கிடைப்பதே இல்லை. சாலை, தெருவிளக்கு, குடிநீர், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் முறையாக செய்வதில்லை.

தெருக்களில் போதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. மேலும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் முறையாக அகற்றாததால் சாலையில் மலைபோல் தேங்கிக் காணப்படுகிறது. அவற்றை அந்தப் பகுதிகளில் சுற்றித் திறியும் மாடு, நாய் போன்ற விலங்குகள் கிளறுவதால் குப்பைகள் சாலை எங்கும் சிதறி காணப்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது.  மேலும், இதில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி, தினமும் கொசுக்கடியால் அவதியுற்று வருகிறோம். இதனால் மீண்டும் நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளோம். இது குறித்து புகார் தெரிவிக்க நகராட்சி அலுவலகம் சென்றால், முதன்மை செயற்பொறியாளர் சரவணன் பொதுமக்களை சந்திக்க மறுத்து வருகிறார். மாறாக ஒப்பந்ததாரருடன் மட்டும் மணிக்கணக்கில் தனது அறையில் பேசி வருகிறார்.  எனவே, பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு, போதிய குப்பைத் தொட்டிகளை அமைத்துத் தந்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதுடன், நோய்கள் பரவாமல் காக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...