தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்

சென்னை: தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என்று வைகோ ெதரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோர் எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, அவர்கள் வைகோவிற்கு சால்வை அணிவித்தனர். அவர்களுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
Advertising
Advertising

தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும், 18 சட்டசபை தொகுதியிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி வாகை சூடவிருக்கிறது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தஞ்சை சட்டசபை தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோர் மாபெரும் வெற்றியை ஈட்டுவார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அங்கே ஒலிப்பார்கள். 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை நடைபெறாத மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 20ம் தேதி முதல் திருவாரூரில் பிரசாரம் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொள்கிறார்.

நான் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரசாரத்தை தொடங்குகிறேன். அங்கு ஆரம்பித்து தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலில் ஜனநாயகம் வெற்றிபெறும். மதசார்பின்மை பாதுகாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படும். இந்துத்துவா சக்திகளின் முயற்சி முறியடிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு தேர்தல் களத்தை சந்திக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார். முத்தரசனுடன் சந்திப்பு: இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தயாநிதி மாறன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related Stories: