காலாப்பட்டு பகுதியில் பஸ் நிலையம் அமையுமா?

காலாப்பட்டு, மார்ச் 19: புதுவை காலாப்பட்டு பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுவையின் எல்லை பகுதியாக விளங்கும் காலாப்பட்டு பகுதி கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைக்கொண்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகவும் விளங்கி வருகிறது. இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தனியார் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள், மத்திய பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, நவோதயா வித்யாலயா பள்ளி, மத்திய சிறைச்சாலை, அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட முக்கியமான இடங்களும், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. இதனால் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்களும், அருகில் உள்ள தமிழக பகுதி மக்களும் இப்பகுதிகளுக்கு தினந்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இதற்காக காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு அலுவல்களுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்வதால் இங்குள்ள கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் காலாப்பட்டு பகுதியில் பஸ் நிலையம் இல்லாததால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையம் இல்லாததால் இங்கு வரும் பஸ்களை சாலையிலேயே திருப்ப வேண்டியுள்ளது. இதனால் இசிஆர் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பஸ்கள் திரும்பும்போது மற்ற வாகனங்கள் நிற்க வேண்டியிருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள் வெயிலியே நிற்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என இங்குள்ள மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதை யாரும் கண்டுகொள்வதில்லை.எனவே பொதுமக்களின் நலன் கருதி காலாப்பட்டு பகுதியில்

இடம் தேர்வு செய்து விரைவில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், காலாப்பட்டு மட்டுமின்றி பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் நிழற்குடை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: