தவளக்குப்பம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் முயற்சி

பாகூர், மார்ச் 19:  தவளக்குப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பெண்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தவளக்குப்பம் அரசு ராஜீவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக கல்லூரியில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்புக்கு வந்தனர்.

இதுகுறித்து அறிந்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதியில்லை எனவும், மீறி போராட்டம் நடத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினர்.இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: