×

இந்திய கம்யூ., நிர்வாகிகள் 2வது நாளாக தீவிர ஆலோசனை

புதுச்சேரி, மார்ச் 19:  தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது திமுகவுக்கு ஆதரவளிப்பதா? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது முடிவை இன்று அறிவிக்கிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டு, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மக்களவை தேர்தலுடன் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. 2016ல் நடந்த தேர்தலில் சேதுசெல்வம் (இந்திய கம்யூ) 2ம் இடம் பிடித்திருந்தார். இதனால் இந்திய கம்யூ., மீண்டும் போட்டியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெற்றுள்ள காங்.- திமுக கூட்டணியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய கம்யூ., கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

 இந்நிலையில் அதிருப்தியில் உள்ள இந்திய கம்யூ., கட்சி தலைவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினர். அதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு கூட்டம் துவங்கி நடைபெற்றது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசியக்குழு உறுப்பினர்கள் நாரா.கலைநாதன், ராமமூர்த்தி, கீதநாதன், அபிஷேகம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேதுசெல்வம், சுப்பையா, தினேஷ் பொன்னையா, சரளா, முருகன், தனராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து 3 மணி நேரமாக தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். இதுகுறித்து மாநில செயலாளர் சலீமிடம் கேட்டபோது, நிர்வாகக் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (இன்று) மாநிலக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படும். அதன் பிறகு கட்சியின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.  தட்டாஞ்சாவடி தொகுதியில் திமுக வேட்பாளராக தொழிலதிபர் வெங்கடேசன் போட்டியிடுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்தகைய  பரபரப்பான சூழலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுமா? அல்லது திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்ளுமா? என்பது இன்று (19ம் தேதி) தெரிந்துவிடும்.

Tags : Communist Party of India ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்