கோயில் உண்டியலை உடைத்து ₹50 ஆயிரம் கொள்ளை

பாகூர், மார்ச் 19: பாகூரில் கோயில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகூர் மார்க்கெட் வீதியில் பூலோக மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பு (58) என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பூசாரி அப்பு கோயிலை திறக்க சென்றார். அப்போது, கோயிலின் முன்பக்கத்தில் இருந்த உண்டியல் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். சம்பவத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகூர் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கோயிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோயிலின் பின்பக்கம் உண்டியல் உடைக்கப்பட்டு சில்லரை காசுகள் சிதறிக் கிடந்தது. பின்புறம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் முன்புறம் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்துக்கொண்டு பின்புறம் சென்றுள்ளனர். அங்கு உண்டியலை உடைத்து ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, சில்லரை காசுகளை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர். சுமார் ரூ.50ஆயிரம் பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதுதொடர்பாக பாகூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: