15 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம், மார்ச் 19:  விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 15 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். இதற்கான அரசாணையின்படி, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி ஆகியவற்றுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறையினரும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே விழுப்புரம் நகரில் பெருமளவு இந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் பெயரளவில் பிடித்து மொத்த வியாபாரிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் புகார்கள் ஆட்சியருக்கு வந்தன.

 அதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமையில் நேற்று அதிகாரிகள் காமராஜர் வீதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் 8 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் அந்த கடை உரிமையாளரின் உறவினர் கடைகளிலும் 7 டன் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் உடந்தையாக இருந்த உணவுபாதுகாப்பு நகர அலுவலர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

Related Stories: