நாடாளுமன்ற வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி

கள்ளக்குறிச்சி, மார்ச் 19:      கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் விதிமுறை குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மக்களவை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் காந்த் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன், வட்டாட்சியர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் டிஎஸ்பி ராமநாதன் பேசுகையில் நாளை (இன்று) 19ம் தேதி மனுதாக்கல் துவங்குகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை தாக்கல் செய்கின்றபோது ஒரு வேட்பாளருடன் 4 பேர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்படும். அரசியல் கட்சியினர் வாகனம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னே 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும். வேட்பாளருடன் 3 வாகனத்திற்கு மட்டும் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்படும்.

 கிராமங்களில் முறையான அனுமதி பெற்று சுவர் விளம்பரம் எழுத வேண்டும். தனிநபர் சுவர் விளம்பரங்களில் முறையாக அனுமதி பெறாமல் வரையப்படும் கட்சி சின்னங்களுக்கு தேர்தல் செலவில் காண்பிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த கட்சி வேட்பாளர்கள் மீது செலவு திணிக்கபடும். வாக்கு பதிவு நாட்களில் மதுபான கடைகள் இயங்காது. திருட்டுத்தனமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.     இதில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சுதாகர், குமார், திமுக நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், வெங்கடாசலம், தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் கோவிமுருகன், மாவட்ட துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பாசறைபாலு, பாவரசு, இடிமுரசு, பாஜக நிர்வாகிகள் ராஜேஷ், சர்தார் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  

Related Stories: