×

மாட்டுவண்டிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

திட்டக்குடி, மார்ச் 19: திட்டக்குடியில் மணல் குவாரியில் இருந்து இரவு பகல் என பராமல் மணல் ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து மாட்டுவண்டிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திட்டக்குடி அடுத்த இளமங்கலத்தில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அங்குள்ள வெள்ளாற்றில் இருந்து மணலை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலைக்கு வருவதற்கு வழி இல்லை. இதனால் பொதுப்பணித்துறையினர் திட்டக்குடி வெள்ளாற்றில் ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலத்தின் அருகில் மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டிகளுக்கு மணலை வழங்க ஆரம்பித்தனர். நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் மணல் அள்ளுவதால் வெள்ள பெருக்கின் போது புதியதாக கட்டப்பட்ட பாலம் உடையும் அபாய நிலையில் உள்ளது. இங்கு மணல் ஏற்றும் மாட்டு வண்டிகள் ஒருவழிப்பாதையான காப்பாளர் தெரு, நானூற்றொருவர் கோயில் தெரு வழியாக நெடுஞ்சாலையை அடைந்து பல்வேறு ஊருக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில் தொடர்ந்து இந்த தெருக்களில் மாட்டு வண்டிகள் சாரை சாரையாக செல்வதால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கோ அல்லது முக்கிய தேவைகளுக்கோ சைக்கிள், பைக்குகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த இந்த இரண்டு தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென இவ்வழியாக சென்ற மாட்டு வண்டிகளை முற்றுகையிட்டு, இந்த தெருக்கள் வழியாக இனிமேல் மாட்டுவண்டிகள் செல்லக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார், மாட்டுவண்டிகளை முற்றுகையிட்ட பொதுமக்களிடம், மணல் குவாரியை மாற்று இடத்துக்கு மாற்றவோ அல்லது ஆற்றில் இருந்து கரைக்கு ஏறும் மாட்டுவண்டிகளுக்கு வேறு வழித்தடத்தை மாற்றி அமைத்தோ போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : civilians ,
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...