×

பறக்கும்படை தாசில்தார் உள்பட 7 பேர் படுகாயம்

பண்ருட்டி, மார்ச் 19: பண்ருட்டி அருகே கார் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் பறக்கும்படை தாசில்தார் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி தேர்தல் பறக்கும்படை தாசில்தார் ஜெயக்குமார் (43). இவர் நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக பண்ருட்டியில் இருந்து நெய்வேலி நோக்கி காரில் புறப்பட்டார். அவருடன் நெல்லிக்குப்பம் போலீஸ்காரர்கள் ஆனந்த்பாபு (40), சரவணன் (45), புதுப்பேட்டை போலீஸ்காரர்கள் பழனிவேல் (56), கவிராஜா (40), வடலூரை சேர்ந்த கேமராமேன் சார்லஸ் (50) ஆகியோர் சென்றனர். நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா (37) என்பவர் காரை ஓட்டினார். பணிகளை முடித்து விட்டு நேற்று மீண்டும் பண்ருட்டி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலையில் முந்திரிக்கட்டை ஒன்று கிடந்தது. அருகில் வந்தவுடன் இதைபார்த்த டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்னால் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரின் பின்பகுதி நசுங்கியது. காரில் பயணம் செய்த தாசில்தார் ெஜயக்குமார் உள்பட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தாசில்தார் ஜெயக்குமார், காவலர்கள் ஆனந்த்பாபு, சரவணன், கேமராமேன் சார்லஸ், டிரைவர் காசிராஜா ஆகிய 5 பேரும் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக டிரைவர் மீது காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tashildar ,
× RELATED கடலூரில் குடுகுடுப்பைக்காரர்களுக்கு...