×

டோக்கனுக்கு பொருட்கள் வழங்க கூடாது

விருத்தாசலம், மார்ச்  19: நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்  விருத்தாசலம் சார்ஆட்சியர்  அலுவலகத்தில் நடந்தது. விருத்தாசலம் தாசில்தார் கவியரசு தலைமை தாங்கினார். தேர்தல் துணை  வட்டாட்சியர் அன்புராஜ், மண்டல துணை வட்டாட்சியர் வேல்முருகன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் வரவேற்றார்.  விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும்  பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்,  திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அச்சக உரிமையாளர்களுக்கு  பேனர், போஸ்டர்களில்  மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ரூ.50 ஆயிரத்திற்கும் மேலாக பணம் கொண்டு போகும்போது உரிய ரசீது கொண்டு செல்லவேண்டும். மேலும் ரூ.10ஆயிரத்திற்கும்  மேல் பொருட்கள் வாங்கினால் அவர்கள் விவரத்தை பெறவேண்டும். டோக்கன்  வாங்கிக்கொண்டு பொருட்கள் தரக்கூடாது. பெட்ரோல் பங்குகளில் டோக்கன் முறையில் பெட்ரோல் வழங்கக்கூடாது. திருமண மண்டபங்களில் எந்தவித அரசியல்  தலைவர்கள் மற்றும் கட்சிகளை சார்ந்த பேனர்கள் வைக்ககூடாது. திருமண  மண்டபங்களில் வைத்து இலவச பொருட்கள் வழங்க கூடாது. விருத்தாசலம் தெற்கு,  வடக்கு, ஊமங்கலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட குறுவட்டங்களை சேர்ந்த  ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விருத்தாசலம் கிராம நிர்வாக அலுவலர்  கெங்காசலம் நன்றி கூறினார்.

சிதம்பரம்: சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டபம், ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்களுடன் தேர்தல் குறித்ததான ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. சிதம்பரம் சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான விசுமகாஜன் தலைமை வகித்து பேசினார்.அவர் பேசுகையில், தேர்தலின் போது வெளியூரில் இருந்து வரும் ஆட்களை திருமண மண்டபம், லாட்ஜ்களில் தங்க வைக்க கூடாது. திருமண மண்டபங்களில் அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பிரியாணி விருந்து நடத்தக்கூடாது. லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து தங்கினால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இது போன்று ஓட்டல்களில் அரசியல் கட்சியினர் தொண்டர்களுக்கு டோக்கன் அளித்து உணவு வழங்க கூடாது. அப்படி வழங்கினால் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட பில்களை ஒப்படைக்க வேண்டும். இந்த பில் தொகைகள் சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர் செலவு கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.இக் கூட்டத்தில் சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜவேல், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், ஓட்டல் உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...