×

வெள்ளாற்றில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 19: சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் கழிவுநீர் குட்டையாக தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வலியுறுத்தியும் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு பகுதியில் வெள்ளாறு செல்கிறது. மழை இல்லாததால் தற்போது ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளாற்றில் சுகாதாரமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிட கழிவுநீர், இறைச்சி கடைகளின் கழிவுகள் அனைத்தும் நேரடியாக புதிய பாலம் வழியாக கலந்து வடிகாலாக சென்று வெள்ளாற்றின் நடுவே திறந்தவெளியில் பள்ளம் தோண்டப்பட்டு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்

பகுதி மக்கள் மாசடைந்த துர்நாற்றம் வீசும் காற்றை சுவாசித்து வருகின்றனர். இதனருகே பன்றிகளும் உலா வருவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கோழி இறைச்சி, மீன் இறைச்சி கழிவுகள் குவியலாக கொட்டி செல்கின்றனர். இதனை நாய்களும் சுற்றி வந்து வெள்ளாற்றுக்கு இயற்கை உபாதை மற்றும் குளிக்க செல்லும் பொதுமக்களை கடிக்கவும் செய்கிறது.வெள்ளாற்று புதிய பாலத்தின் வடக்கு பகுதியில் சேத்தியாத்தோப்பு பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகையும், அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த விருந்தினர் மாளிகையில் தினமும் மாவட்ட அரசு அதிகாரிகள், எம்எல்ஏ, எம்பி என பலர் தங்கி ஓய்வெடுத்து விட்டு செல்வர். ஆனால் இப்பகுதியில்சுகாதாரமான காற்று இல்லாமல் வெள்ளாற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் தற்போது யாரும் தங்குவதில்லை. மேலும் வெள்ளாற்றின் நடுவே கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள போர்வெல் தொட்டி தான் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் தண்ணீர் வழங்கி வருகிறது. கழிவுநீர் தேங்கியுள்ள இடத்திலிருந்து சிறிது தூரத்தில் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளது.

தனியார் திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம், தனியார் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உணவகங்கள், பசும்பால் விற்பனை நிலையம், மருந்தகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகிறது. புதிய பாலத்தின் வழியே சென்னை- கும்பகோணம் செல்லும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், வாகனங்களும் செல்லும். பயணிகள் மூக்கைப் பிடித்தபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் சுத்தமான காற்றை சுவாசித்து நீண்ட நாட்கள் ஆகிறது. வெள்ளாற்றில் கழிவுநீர் நேரடியாக கொண்டு வந்து கொட்டும், கழிவுநீர் குட்டை அமைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை பொதுப்பணித்துறை, சுகாதார துறை, மாசு கட்டுப்பாட்டு துறைக்கும் மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் சிறிது கூட செவிசாய்க்கவில்லை. தண்ணீர் பிரச்னை உள்ள நிலையில் ஆறுகளை பராமரிக்காமல் அசுத்தம் ஏற்படுத்தினால் எதிர்காலத்தில் சுற்றுவட்டாரம் பகுதியில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியது வரும். இதனை உணர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக இந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : valley ,
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...