×

ஆரல்வாய்மொழி அருகே மீண்டும் சம்பவம் டாஸ்மாக் கடை சூப்பர் வைசரை வெட்டி ₹5.33 லட்சம் கொள்ளை பைக்கையும் பறித்து சென்றனர்

ஆரல்வாய்மொழி, மார்ச் 19 :  நாகர்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில் குமாரபுரம் விலக்கு செல்லும் இணைப்பு சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த முருகன் (42) என்பவர் சூப்பர் வைசராக உள்ளார். இது தவிர 2 விற்பனையாளர்கள், 2 உதவியாளர்கள் இந்த கடையில் பணியாற்றி வருகிறார்கள். விடுமுறை நாட்களில் அதிகளவில் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, டாஸ்மாக் கடையை மூடி விட்டு, விற்பனை பணம் ₹5 லட்சத்து 33 ஆயிரத்து 880 ஐ தனது பைக்கில் வைத்துக் கொண்டு முருகன், வீட்டுக்கு புறப்பட்டார்.அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இருட்டான பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரே பைக்கில் வந்த 3 பேர் ெகாண்ட கும்பல் முருகனை வழி மறித்தது.  கையில் அரிவாள் வைத்திருந்த அவர்கள், பைக்கை தருமாறு முருகனிடம் கேட்டனர். ஆனால் அவர் பைக்கை தர மறுத்தார். இத னால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அரிவாளால் முருகனை கை, காலில் வெட்டினர்.

இதில் நிலை தடுமாறி முருகன் விழுந்த போது, அவரது பைக்கை அந்த கும்பல் எடுத்துக் கொண்டு தப்பியது. அந்த சமயத்தில் இந்த டாஸ்மாக் கடையின் பணியாளர்களில் ஒருவரான புஷ்பராஜ், மற்றொரு பைக்கில் வந்தார். அவர் அந்த கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் தாக்கி விட்டு அந்த கும்பல் முருகனின் பைக்குடன் தப்பினர். அந்த பைக்கில் தான் பணமும் இருந்தது. உடனடியாக இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார்  மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலை பகுதிகளில் கண்காணித்தனர். ஆனால் திருட்டு கும்பல் பற்றி எந்த தகவலும் இல்லை. டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த முருகன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் வைசர் முருகனை டாஸ்மாக் அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

நேற்று முன் தினம் இரவு ஊழியர்கள் கடையை அடைத்த பின், 3 பேர் கொண்ட கும்பல் மது கேட்டு தகராறு செய்தனர். அவர்களிடம் இரவு 10 மணிக்கு பிறகு மது கொடுக்க முடியாது என முருகன் கூறி உள்ளார். அப்போது அவர்கள் முருகனை மிரட்டி விட்டு சென்றுள்ளனர். அந்த கும்பல் தான் பணத்தை பறித்து சென்று இருக்குமா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் தகராறு செய்த நபர்கள் பற்றிய அடையாளம் உள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தைவிளை பகுதியில் டாஸ்மாக் கடை சூப்பர் வைசர் மற்றும் பணியாளர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் சம்பவம் நடந்து இருப்பது டாஸ்மாக் கடை பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : incident ,shop ,Tasmachu ,Aralavuam ,Super Vicer ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி