×

கன்னியாகுமரி அருகே சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை கடன் பிரச்னையில் உறவினர் வெறிச்செயல்

தென்தாமரைக்குளம், மார்ச் 19: கன்னியாகுமரி அருகே கடன் பிரச்சினையில் 4 வயது சிறுவனை கடத்தி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின்ராஜ் (35). மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி சகாய சிந்துஜா என்ற சரண்யா. இவர்களது மகன் ரெய்னா (4). ஆரோக்கிய கெபின்ராஜுக்கும், அவரது தாய் மாமனான அதே பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி (36) என்பவருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடன் கொடுத்த பணத்தை கேட்டு கெபின்ராஜுவிடம், அந்ேதாணிசாமி அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்னரும் தகராறு நடந்துள்ளது.இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை ஆரோக்கிய கெபின்ராஜின் மகன் ரெய்னாவை காண வில்லை. இதனால் பதற்றம் அடைந்த சகாய சிந்துஜா அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடினார். அப்போது அந்தோணி சாமி திடீரென போன் செய்துள்ளார். போனில் பேசிய அவர், உனது மகனை நான் பைக்கில் கடத்தி வந்து விட்டேன். எனது பாதுகாப்பில் தான் ரெய்னா இருக்கிறான். நீ பணத்தை தந்தால் தான் உன் மகனை அழைத்து வருவேன் என கூறி உள்ளார். இதனால் பதறி போன  சகாய சிந்துஜா, இது குறித்து தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். கன்னியாகுமரி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசாரும் தேடி வந்தனர். உறவினர்களும் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று  வட்டார பகுதிகளில் தேடினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில், மணக்குடி அருகே உள்ள தென்னந்தோப்பில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஒருவனின் உடல் கிடப்பதாக தென்தாமரைக்குளம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், தென்தாமரைக்குளம் சப் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தண்ணீர் தொட்டியில் சிறுவன் உடல் கிடக்கும் தகவல் அறிந்ததும் பொதுமக்களும் பெருமளவில் திரண்டனர். இதில் இறந்து கிடந்தது  ரெய்னா என்பது தெரிய வந்தது.
உடனடியாக ஆரோக்கிய கெபின்ராஜ்  மற்றும் அவரது மனைவிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் கதறி அழுதபடி அங்கு வந்தனர். பின்னர் ரெய்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சினையில் சிறுவனை கடத்தி வந்து அந்தோணி சாமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து,  அந்தோணிசாமியை தேடி வந்தனர். டி.எஸ்.பி. பாஸ்கரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள தோப்பில் தலைமறைவாக இருந்த அந்தோணிசாமியை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடித்து காட்டினார்
கைதான அந்தோணிசாமியை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரெய்னாவை கொலை செய்தது குறித்து அந்தோணிசாமி நடித்து காட்டினார். அவரிடம் இது குறித்து வாக்குமூலம் பெற்றனர். அந்தோணிசாமியை போலீசார் அழைத்து வரும் தகவல் தெரிந்ததும், ஆரோக்கிய கெபின் ராஜ், சிந்துஜா ஆகியோரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்த பெருமளவில் திரண்டு இருந்தனர். இதையடுத்து அங்கு டி.எஸ்.பி. பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்து, சப் இன்ஸ்பெக்டர்கள் நித்யா ஆதாம் அலி மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வி.ஏ.ஓ. சிவராகுலும் சம்பவ இடத்துக்கு வந்து இருந்தார். கொலையாளிக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Tags : Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!