×

பணம் கொண்டு செல்லும் போது சோதனை திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 15: பணம் கொண்டு செல்லும் போது தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்வதில் இருந்து தொழில் நகரான திருப்பூருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 11ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், பணம் கொண்டு செல்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திருப்பூர் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது: தேர்தல்  நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பணம் பட்டுவாடாவை தடுக்கும் நோக்கத்தில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதை வரவேற்கிறோம். ஆனால் திருப்பூர் போன்ற தொழில் நகரில் பல்வேறு விதமான தொழில்களில் உள்ள நடைமுறைக்கு பணம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. இந்த கெடுபிடியால் பனியன் வேஸ்ட் வியாபாரிகள், இரண்டாம் தர பனியன் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். இதேபோல் சனிக்கிழமை தோறும் சம்பளத்துடன் பணம் எடுத்து செல்கிறார்கள். இவர்கள் வங்கியில் மட்டும் இல்லாமல் தனியார் நிதி நிறுவனங்களிலும், நட்பு வட்டாரங்களிலும் பணம் கடனாக பெற்றும் கூட எடுத்து செல்வதுண்டு, தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள நிலையில் அதிகாரிகளின் சோதனை நடைமுறைகள் சிறு வியாபாரிகளின் தொழிலை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் போது அதிகாரிகள் சோதனையில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். தேர்தல் விதிமுறை என்ற பெயரில் தொழில் சூழ்நிலை மோசமான நிலைக்கு செல்லாமல் இருக்க அதிகாரிகள் உதவ வேண்டும், என்றனர்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்