10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆனைகட்டி பழங்குடியின மாணவர்கள் தனியார் பள்ளி வாகனத்தில் பயணம்

பெ.நா.பாளையம்,மார்ச்15: கோவை அருகே பழங்குடியின மாணவர்கள் தேர்வு எழுத தனியார் பள்ளி வாகனத்தில் செல்ல  ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. கோவையை அடுத்த ஆனைகட்டியில் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இதில் நடப்பு கல்வி ஆண்டில் 50 மாணவ,மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆனைகட்டியை சுற்றியுள்ள மலை கிராமங்களில்  வசித்து வருகின்றனர். இவர்கள் பொதுத் தேர்வு எழுத  ஆண்டுதோறும் சின்னத்தடாகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு 16 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை நீடித்து வந்தது. மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கல்வித்துறை சார்பில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ,மாணவிகளுக்கு  வாகன வசதி செய்து தரப்படும்  என்று அறிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில் ஆனைகட்டியில் இயங்கி வரும் வித்யா வனம் என்ற தனியார் பள்ளி நிர்வாகம் நேற்று முதல் தேர்வு முடியும் வரை அனைத்து நாட்களிலும் உண்டு உறைவிட பள்ளி மாணவ,மாணவிகள் பொதுத் தேர்வு எழுத சென்று வருவதற்கான வாகன வசதி செய்தது. இதன்படி நேற்று மதியம்ஆனைகட்டி அரசு உயர்நிலை பள்ளியில் இருந்து சின்னதடாகம் தேர்வு எழுதும் மையத்திற்கு பள்ளி வேனில் மாணவ,மாணவிகள் ஏற்றி வரப்பட்டனர். பின் தேர்வு முடிந்தவுடன் மீண்டும் தனியார் பள்ளி வாகனத்தில் ஏறி ஆனைகட்டியை வந்தடைந்தனர். பொதுத்தேர்வு எழுதும் முன்பாக 16 கி.மீ பிரயாணம் செய்ய வேண்டுமே என்ற பதற்றத்தில் இருந்து மாணவ,மாணவிகள் நிம்மதியாக தனியார் பள்ளி ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் அமர்ந்து தேர்வுக்காக படித்தப்படி செல்ல முடிந்ததாக  பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: