வாக்களிக்க 5 கி.மீ தொலைவு நடந்து செல்ல முடியாது நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க செல்லப்பகவுண்டன் புதூர் மக்கள் முடிவு

ெதாண்டாமுத்தூர், மார்ச்15: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியின் 7வது வார்டு மற்றும் 12வது வார்டு பேரூரை அடுத்த செல்லப்பக்கவுண்டன்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 7 மற்றும் 12வது வார்டு பகுதியில் மட்டும் சுமார் ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, செல்லப்பகவுண்டன்புதூர் அரசு துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு இவர்களுக்கான வாக்குமையம் மாதம் பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தங்கள் ஊரில் இருந்து சிறுவாணி மெயின் ரோட்டிற்கு 2 கி.மீ தொலைவும், அங்கிருந்து தண்ணீர் பந்தலுக்கு 2 கி.மீ தொலைவும் பின்னர் மேலும் ஒரு கி.மீ தொலைவில் உள்ள மாதம்பட்டி வாக்குச்சாவடி சென்று வாக்களிக்க வேண்டியதிருப்பதால், வயதானவர்களால் 5 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று வாக்களிக்க முடியாது எனக்கூறிய அப்பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதி, பொதுக்கழிப்பிட வசதி, துவக்கப்பள்ளியை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட  கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு அளித்தும்  மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.

வாக்குச்சாவடி மையத்தை உள்ளூருக்குள் அமைத்து தரக்கோரி பேரூர் தாசில்தாரிடம் இப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடிப்படைவசதி மற்றும் வாக்குச்சாவடி மாற்றம் குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: