தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

கோவை, மார்ச் 15: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி தகவல் பிரிவு மற்றும் ஊடக கண்காணிப்பு பிரிவு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ராசாமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பிரிவில் சந்தேகங்கள் தொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்களை தொடர்பு கொள்ள 1950 இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் மாடியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (விமான நிலைய விரிவாக்கம், நில எடுப்பு) கோவிந்தராஜூலு தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து துணை கலெக்டர் நிலையில் இரு அதிகாரிகளும், வட்டார வளர்ச்சி மற்றும் துணை வட்டார வளர்ச்சி நிலையில் இரு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இம்மையத்தில் புகார்களை தெரிவிக்க 18004254757 இலவச எண் மற்றும் 0422-2201093 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

Advertising
Advertising

அது போலவே ஊடக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் கீழ் தளத்தில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகள் மற்றும் பத்திரிகையில் வரும் செய்திகளை இக்குழு கண்காணிக்கும். மேலும் அரசியல் கட்சிகள் வெளியிடும் விளம்பரங்களையும் மாவட்ட கண்காணிப்பு குழு கண்காணிக்கும். மேலும் அரசியல் கட்சிகள் நடத்திடும் பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி தருவதற்கென ஒற்றை சாளர முறை அனுமதி வழங்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியாக அனுமதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை மாவட்ட கலெக்டர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: