×

நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்த 11,051 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

ஈரோடு, மார்ச் 15:நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு 11 ஆயிரத்து 051 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. இவை வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் தேர்தல் ஆணைய உத்தரவுபடி  நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 217 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 875 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 959 யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரமும் (விவிபேட்) என 11 ஆயிரத்து 51 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மின்னணு கிடங்கு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரம் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `நாடாளுமன்ற தேர்தலுக்காக  மாவட்டத்தில் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நடக்க உள்ள தேர்தலில் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் விவிபேட் இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஏற்கனவே 4 விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து கட்சியினர் முன்பு சரிபார்க்கப்பட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என்பதை கேட்டறிந்து தேர்தலுக்கு முன்பு அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.

Tags : elections ,
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...