ஆக்கிரமிப்பு அகற்றகோரி நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டம் திடீர் ஒத்திவைப்பு

ஈரோடு, மார்ச் 15:சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மக்கள் மன்றம் சார்பில் நேற்று நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.ஈரோடு  மாநகர பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. மேலும்,  பொதுமக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது.  ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள்  மன்றத்தின் சார்பில் மாநகராட்சி காந்திசிலை முன்பு நேற்று உண்ணாவிரத  போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி  ஆணையாளர் இளங்கோவன் உறுதியளித்தார். இதையடுத்து நேற்று நடக்க இருந்த  உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் மன்ற  அமைப்பாளர் செல்லப்பன் கூறுகையில்,`ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு  இடங்களில் ரோடுகளை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். விளம்பர போர்டுகளையும்  ரோட்டில் வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன்  பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதுதவிர, பொதுமக்களுக்கு  தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை  வைக்கப்பட்டது.இந்த பிரச்னை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள  காந்தி சிலை முன்பு 14ம் தேதி (நேற்று) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக  அறிவித்திருந்தோம். இது தொடர்பாக ஆணையாளர் இளங்கோவனை சந்தித்து பேசினோம்.  அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள்  செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து  நேற்று நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்’ என்றார்.

Related Stories: