நாடு முழுவதும் 1.50 லட்சம் பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை

சேலம், மார்ச் 15: நாடு முழுவதும் 1.50 லட்சம் பிஎன்எஸ்என் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை இன்னும் வழங்காமல் நிர்வாகம் இருப்பதால், கடும் அவதியடைந்து வருகின்றனர். மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஎன்என்எல்லில் 36 தொலை தொடர்பு மாநிலங்கள் உள்ளன. இதில், அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள் என 1.76 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதுபோக, ஒப்பந்த ஊழியர்களாக நாடு முழுவதும் 1 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். இதில், பிஎஸ்என்எல் தலைமை அலுவலகமான டெல்லி நிர்வாக பிரிவு அலுவலகம், கேரளா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டும் பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இதர 32 தொலை தொடர்பு மாநிலங்களில் பணியாற்றி வரும் 1.50 லட்சம் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை இதுவரை பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்கவில்லை. கடந்த 17 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது கிடையாது. கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என நிர்வாக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தை, மத்திய அரசு ஆதரித்து, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதன் மூலமும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி வழங்க கூட அனுமதி அளிக்காமல் இருந்து வருவதுமே இந்நிலைக்கு செல்ல காரணம் என தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஊதியம் வழங்காதது குறித்து, டெல்லியில் பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பிப்ரவரி மாத சம்பளத்தை பிடித்தம் போக வழங்க ₹850 கோடி தேவையாக இருக்கிறது. ஆனால், தற்போது ₹250 கோடி மட்டுமே கையிருப்பு இருக்கிறது. அதனால், வரும் 20ம் தேதிக்குள் நிதியை திரட்டி பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்குகிறோம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களாகியும் ஊதியம் கிடைக்காததால், ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுபற்றி தேசிய தொலைதொடர்பு ஊழியர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் பாலகுமார் கூறுகையில், ‘பிஎஸ்என்எல்.,லில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் என 1.50 லட்சம் பேருக்கு ஊதியம் வழங்காமல் இருக்கின்றனர். இதுநாள் வரை, இப்படியொரு நிதி நெருக்கடி ஏற்பட்டது கிடையாது. இதற்கெல்லாம் மத்திய அரசின் தவறான கொள்கை தான் காரணம். கடந்த மாதம் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். ஆனால், தற்போது மாத ஊதியத்தை கேட்டு போராட வேண்டியுள்ளது,’ என்றார்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு  3 மாதம் சம்பளம் இல்லை

நாடு முழுவதும் பிஎஸ்என்எல்லில் பணியாற்றி வரும் 1 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் தொலை தொடர்பு மாவட்டத்தில் சேலம், நாமக்கல்லில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டும் டிசம்பர், ஜனவரி மாத ஊதியத்தை தொழிற்சங்கத்தினர் பேசி வாங்கி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: