×

சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய வளர்ச்சி அலுவலர் மேலும் 2 இடத்தில் வசூல் வேட்டை நடத்தியது அம்பலம்

சேலம், மார்ச் 15: சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய அங்கன்வாடி மைய வளர்ச்சி அலுவலர், மேலும் 2 இடத்தில் வசூல் வேட்டை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ், அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. இதில் சேலம் மாநகரில் அன்னதானப்பட்டி, கோட்டை, மணக்காடு ஆகிய 3 பிளாக்குகளில் 133 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதன் வளர்ச்சி அலுவலராக பாலாம்பிகை (42) உள்ளார். இவர், வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வாடகை தொகையான ₹3 ஆயிரத்தில் இருந்து ₹1000, சமையலுக்கு காய்கறிகள் வாங்குவதில் இருந்து ₹500 என வசூலித்து வருவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அன்னதானப்பட்டி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள அங்கன்வாடி மையத்தில், வசூல் வேட்டை நடப்பதை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏடிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர். அப்போது பாலாம்பிகையால் நியமிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர்களான நூர்ஜகான், சாந்தி ஆகியோர் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாலாம்பிகையை வரவழைத்து விசாரித்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு சோதனையை முடித்த அதிகாரிகள்,  ₹50,450யை பறிமுதல் செய்தனர். பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். வளர்ச்சி அலுவலர் பாலாம்பிகையிடம் நடந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வளர்ச்சி அலுவலர் பாலாம்பிகை, 3 பிளாக்கிற்கும் தனித்தனியே தலா 2 லீடர்களை நியமித்து, வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளார். அன்னதானப்பட்டியில் 15 அங்கன்வாடி மையங்களில் இருந்து வழங்கப்பட்ட பணம் ₹50 ஆயிரத்தை மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர். மீதியுள்ள சுமார் 30 அங்கன்வாடி மையத்தினர், அடுத்தடுத்த நாட்களில் பணத்தை கொண்டு வந்து கொடுப்பதாக இருந்தனர். அதேபோல், கோட்டை, மணக்காடு பிளாக்கிலும் வசூல் வேட்டைக்கு நியமிக்கப்பட்டுள்ள 4 பேரும், ஒவ்வொரு மாதமும் பணத்தை வசூலித்து பாலாம்பிகையிடம் கொடுத்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வசூல் வேட்டையில் ஈடுபட்டு சிக்கிய வளர்ச்சி அலுவலர் பாலாம்பிகை, நூர்ஜகான், சாந்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

Tags : Salem ,development officer ,locations ,
× RELATED முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய ஆணை!!