×

ஆட்களை கடத்தி ₹1.70 லட்சம் பறித்த வழக்கு சாட்சி சொல்ல கூடாது என மிரட்டுவதாக நீதிபதியிடம் புகார்

சேலம், மார்ச் 15: சேலத்தில் ஆட்களை கடத்தி பணம் பறித்த வழக்கில் சாட்சி சொல்ல கூடாது என மிரட்டுவதாக நீதிபதியிடம், பேராசிரியர் கொடுத்த புகார் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் நிலம் ஒன்றை வாங்கி விட்டு, 3 பேருடன் கடந்த 2015ம் ஆண்டு வீராணம் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரை மறித்து அவர்களை கடத்திய கும்பல் ஒன்று, ரவீந்திரனிடம் இருந்த ₹1.70 லட்சத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து,  வலசையூரைச் சேர்ந்த செந்தில்குமார், கவுதமன், வீரப்பன், சரவணன், சந்தோஷ்குமார், பிரபல ரவுடிகளான கரிகாலன், சிக்கந்தர்பாஷா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்த வழக்கு, நேற்று நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் செந்தில்குமார், கவுதமன், வீரப்பன் ஆகியோர் மட்டும் ஆஜராகினர். மற்றவர்கள் வழக்கறிஞர்கள் மூலம் மனு கொடுத்திருந்தனர். இதில் புகார்தாரர் ரவீந்திரன் இறந்துவிட்டார். இதையடுத்து 2வது சாட்சியான கல்லூரி பேராசிரியர் வெங்கடாசலம்(43) சாட்சியம் அளிக்க வந்தார். அப்போது அவர் நீதிபதியிடம், தன்னை இவ்வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டுவதாக புகார் கூறினார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாட்சி வெங்கடாசலத்திடம், நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தார். பின்னர், இவரது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தகுமார்,  குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமார், கவுதமன், வீரப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags : judge ,witness ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...