அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் இலவச வேட்டி-சேலையால் மறைப்பு

ஆத்தூர், மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து, ஆத்தூர் பகுதியில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், தலைவர்களின் சிலைகள் மற்றும் கல்வெட்டுக்கள் ஆகியவற்றை, உள்ளாட்சி மற்றும் வருவாய்துறையினர் மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், தலைவர்களின் சிலைகள், கொடி கம்பங்களை மூடுவதற்கு, தமிழக அரசு முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு 2018-19 ஆண்டு வழங்குவதற்காக வழங்கிய விலையில்லா வேட்டி-சேலைகளை பயன்படுத்தி உள்ளனர். இது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், சிலைகளை மூட விலையில்லா வேட்டி-சேலைகளை பயன்படுத்தி உள்ளனர். பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய இந்த சேலைகள்  வீணடிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் எண்ணிக்கையை குறைத்து காட்டி, மோசடியில் ஈடுபட்டுள்ளனரா, அல்லது அவர்களுக்கு வழங்கப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இதுதொடர்பாக கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். இது குறித்து கேட்க, ஆத்தூர் தாசில்தார் செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.ஓமலூர்: ஓமலூர்,  காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் ஆகிய பகுதிகளில், அரசியல்  கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்த ஆளும்கட்சியின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த பேரூராட்சி அதிகாரிகள், ஓமலூர்,  தாரமங்கலம், கருப்பூர் பேருந்து நிலையம், மேட்டூர் சாலை, சேலம்- பெங்களூரு  தேசிய நெடுஞ்சாலை உட்பட மற்றும் 65 கிராமங்களில் இருந்த கட்சி கொடி  கம்பங்களை கிரேன் மூலம் அகற்றினர். தொடர்ந்து பீடங்களை துணி கொண்டு மறைத்தனர்.  ஓமலூர் வட்டாரத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறை  பணியாளர்கள், விவசாய தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கப் பயன்படுத்தும் பவர் ஸ்பிரேயர் மூலம் சுண்ணாம்பு அடித்து அழித்து வருகின்றனர். 

Related Stories: