×

பள்ளிபாளையம் வட்டாரத்தில் ஈகோ பிரச்னையால் 2 வாரம் கழித்து சம்பளம் வழங்கிய அதிகாரிகள்

பள்ளிபாளையம், மார்ச் 15:  வட்டார கல்வி அதிகாரிகளுக்குள் ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்னை காரணமாக பள்ளிபாளையத்தில் 2 வாரங்களுக்கு பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 350 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 28ம் தேதியே வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக சம்பள விவவகாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. சம்பளம் போடுவதில் தாமதத்தால் வங்கி கடன், கூட்டுறவு வீட்டு கடன் வாங்கிய ஆசிரியர்கள் வாங்கிய கடனை குறித்த தேதியில் கட்ட முடியாமல் அபராத கட்டணம், தாமதக்கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து கட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பள்ளிபாளையம் வட்டாரத்தில் பிப்ரவரி மாத சம்பளம் நேற்றுதான்(14ம் தேதி) ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், பள்ளிபாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், இரண்டு இளநிலை உதவியாளர்கள் இருந்த போது கூட ஒவ்வொரு மாதமும் 28ம் தேதியே சம்பளம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், தற்போது பள்ளிபாளையம் வட்டார அலுவலகத்திற்கு இரண்டு கல்வி அதிகாரியும், ஆறு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை கருவூலத்திலிருந்து பெற்று தருவதில் அலட்சியம் காட்டுகின்றனர். அதிகாரிகளுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்னையால் சம்பளம் வழங்குவதில் தாமதமாகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மற்ற வட்டாரங்களில் உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படும் நிலையில், பள்ளிபாளையம் வட்டாரத்தில் மட்டும் இரண்டு வாரம் கடந்த நிலையில் தற்போது சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : area ,School Palaipalayam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...