×

அதிகாரிகளின் அவசர நடவடிக்கையால்நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை பராமரிப்பதில் சிக்கல்

நாமக்கல், மார்ச் 15: நாமக்கல் நகராட்சி அலுவலத்தில் ஆவணங்கள் வைக்க போதிய இடமில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் நகராட்சி அலுவலகம் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக பரமத்தி ரோட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், திருச்செங்கோட்டில் உள்ள தினசரி சந்தை வளாகத்தில் நாமக்கல் நகராட்சிக்கு புதிய அலுவலகம் ₹2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய அலுவலகத்தை கடந்தாண்டு நவம்பர் 19ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.அடுத்த நாளே புதிய அலுவலகத்தில் நகராட்சி அலுவலகம் செயல்படத் தொடங்கியது. அவசர கோலத்தில் நகராட்சி ஆணையாளர், பழைய அலுவலத்திலிருந்து புதிய அலுவலகத்திற்கு ஒரே நாளில் மாற்றினார்.அலுவலகம் மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் புதிய அலுவலகத்தில் பல்வேறு மராமத்து வேலைகள் நடந்து வருகிறது. குறிப்பாக, நகராட்சியில் பராமரிக்கப்படும் ஆவணங்களை வைக்க இன்னமும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆவணங்களை வைக்க புதிய ரேக்குகள் அமைக்கும் பணியில், 20 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். பரமத்தி ரோட்டில் செயல்பட்டு வந்த பழைய நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆவணங்கள் அனைத்தும் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட பீரோக்களில் வைக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தில் பீரோக்கள் வைக்ககூடாது என அதிகாரிகள் கூறிவிட்டதால் அனைத்து ஆவனங்களும் இன்னமும் பழைய நகராட்சி அலுவலக பீரோவில் பூட்டி கிடக்கிறது.

இதனால் நகராட்சியில் ஒவ்வொரு பிரிவிலும் பணியாற்றி வரும் அலுவலர்களும் தங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க நகராட்சி அலுவலகத்தில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை பாதுகாத்து வைக்க முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என நகராட்சி அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்கள் கூறியது, நகர்மன்றதலைவர் அறை, ஆணையாளர் அறை, பொறியாளர் அறை போன்றவை ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி ஆவணங்களை வைத்துக்கொள்ள போதுமான வசதிகளை நகராட்சி அலுவலக கட்டுமான பணிகளை கவனித்த அதிகாரிகள் முன்கூட்டியே ஏற்படுத்தவில்லை. இதனால், புதிய கட்டிடத்துக்கு நகராட்சி அலுவலகம் சென்றும், பழைய அலுவலகத்தை வாடகைக்கு விட முடியவில்லை. இதனால் அரசுக்கு மாதம் ₹2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. பழைய அலுவலகத்தில் உள்ள பீரோக்களின் முக்கிய ஆவணங்கள் இருப்பதால், நகராட்சி பணியாளர் ஒருவர் இரவு நேர வாட்ச்மேன் வேலை பார்க்க வேண்டியுள்ளது.பழைய நகராட்சி அலுவலகத்தை வாடகைக்கு எடுக்க பல்வேறு வங்கிகள் நகராட்சி நிர்வாகத்தை அணுகியபோதும், அதற்கு இடம் கொடுக்க முடியாத நிலை தற்போது உள்ளது. அவசரகோலத்தில் நகராட்சி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நகராட்சி அலுவலர்கள் கூறினர்.  

Tags : office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்