×

சேலம், நாமக்கல்லில் தேர்தல் வாகன தணிக்கை டாக்டர், வாலிபர்களிடம் ₹5.80 லட்சம் பறிமுதல்

சேலம், மார்ச் 15:நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனையில், லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரை, ₹12.19 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி பொருட்கள், எவல்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை, கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர், உதவி பொறியாளர் மணிகண்டன் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் பெங்களூருவில் இருந்து வந்த ஒரு சொகுசு பஸ்சை சோதனையிட்ட போது, அதில் வந்த பயணி சந்தோஷ் (32) என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ₹1.30 லட்சம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பணம் எடுத்து வந்த சந்தோஷ், பெங்களூருவில் இருந்து செங்கோட்டைக்கு சென்றது தெரியவந்தது. தொடர் சோதனையில், ஒரு காரில் மதுபாட்டில்கள் எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. அதில், 10 பாட்டில் பீர், 10 குவார்ட்டர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில், வேளாண் துறை அதிகாரி ராஜாமணி தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ₹1.72 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் காரில் வந்தவர், சீலநாயக்கன்பட்டி அண்ணாமலை நகரை சேர்ந்த டாக்டர் தினேஷ்குமார் என்பதும், தனது குழந்தைக்கு கல்வி கட்டணம் செலுத்த பள்ளிக்கு பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், சேலத்தில் ₹3.02 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் உத்திரகிடிக்காவல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(35). நேற்று இவர் ஓட்டி வந்த லாரியை, நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் சாலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ₹2 லட்சத்து 8 ஆயிரம் பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் சப் கலெக்டர் கிரந்திகுமார்பதியிடம் ஒப்படைத்தனர். இந்த வகையில் சேலம், நாமக்கல்லில் நேற்று நடந்த வாகன தணிக்கையில் ₹5.8லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Tags : Election Commission ,auditor ,Namakkal ,
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!