×

அணை கட்ட இடம் கொடுத்தும் பாராமுகம் பட்டா வழங்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி அருகே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சியில், கடந்த 1952ம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் வசித்து வந்த ஏராளமான மக்கள், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணிக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வனத்தையொட்டி உள்ள நிலங்கள் அளிக்கப்பட்டது. அதன்படி, அணையின் மேற்குபுறம் சோக்காடி ஊராட்சியில் வனப்பகுதியை ஒட்டியவாறு 75 குடும்பங்களுக்கு நிலம் அளிக்கப்பட்டது. தற்போது, அப்பகுதியில் 185 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், இதுவரை அவர்களது வீடு மற்றும் நிலங்களுக்கு உரிய பட்டா வழங்கப்படவில்லை. மூன்று தலைமுறையாக பட்டா கேட்டு போராடி வருகின்றனர். எவ்வித அடிப்படை வதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை யாரும் கண்டு கொள்ளாததால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

அணை கட்ட நிலம் கொடுத்தவர்களில் ஒரு பகுதியினர், இங்குள்ள குள்ளன்கொட்டாய், ஜம்பூத்து, காட்டுபெருமாள்கோவில், ஆலமரத்துக்கொட்டாய், கெடிவெங்கட்டராமன் கோவில் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால், 64 ஆண்டுகளாக வீடுகளுக்கும், நிலத்திற்கும் பட்டா வழங்க கோரி பல முறை மனு அளித்தும் வழங்கவில்லை. கடந்த 2010ம் ஆண்டு நில அளவீடு செய்து பட்டா வழங்க ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 9 ஆண்டுகளாகியும், அளவீடு செய்யாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். பட்டா இல்லாத காரணத்தால் அரசின் சலுகைகள், வேளாண் மானியங்கள் என எவ்வித பலனும் இல்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறு, குறு விவசாயிகளுக்கான ₹6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் நாங்கள் ஒருவர் கூட விண்ணப்பிக்க முடியவில்லை. சாலை, குடிநீர் வசதி இல்லாமல் அவதியடைந்து வருகிறோம். அணைக்கு நாங்கள் வழங்கிய நிலம் மூலம், இன்று இம்மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், நாங்கள் நாடோடிகள் போல் வசித்து வருகிறோம். எனவே, பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags : election ,dam ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...