×

தேவையான உதவிகளை பெற மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு புதிய ஆப் அறிமுகம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

பெரம்பலூர், மார்ச் 15: மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளை  பெறுவதற்காக புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரான  கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.  
மாற்றுத்திறனுடைய  வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வகையில், இந்தியத் தேர்தல்  ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும்,  மாற்றுத்திறனாளிகளிடையே தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும்,  கலெக்டருமான சாந்தா தலைமை வகித்துப் பேசியதாவது,  நடைபெறவுள்ள  நாடாளுமன்ற  பொதுத் தேர்தலில் எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதற்காக இந்திய  தேர்தல் ஆணையம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும்  தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில்  வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்  வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு  வருகிறது. அதிலும் முக்கியமாக மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள்  வாக்குச்சாவடிக்கு எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சாய்தளத்துடன்  கூடிய படிக்கட்டுகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை  வசதிகளும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  சார்பில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளை  பெறுவதற்காக புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக  மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள், தாங்கள் சார்ந்துள்ள வாக்குச்சாவடி குறித்த  முகவரி, பாகம் எண் உள்ளிட்டத் தகவல்களை தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை  எண்ணைப் பதிவு செய்து பெறமுடியும். மேலும் வாக்களிக்க வருகை தரும்  மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தேவையான வீல்சேர், பிரைலி உள்ளிட்ட உதவி  உபகரணங்களை இதன் மூலம் பதிவு செய்வதன் மூலமாக, அவர்களுக்குத் தேவையான  உதவி உபகரணங்களை வாக்களிக்கும்போது பெற்று பயன்படுத்திக்கொள்ள  முடியும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களும் தங்கள்  பெயர்களை இந்த புதிய ஆப் மூலமாக வாக்காளர் பட்டியலில் இணைத்துகொள்ள  படிவங்களை அளிக்க முடியும். எனவே மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள் அனைவரும்  இத்தேர்தலில் முழுமையாக பங்கேற்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்  எனத் தெரிவித்தார்.  இம்முகாமில் புதிய ஆப்பினை பயன்படுத்தும் முறைகள்  குறித்தும், அதன் மூலமாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு ஏற்படும்  நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது மகளிர் திட்ட  இய க்குநர் தேவநாதன், ஆர்டிஓ விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : District Electoral Officer ,Voters ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...