சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: பயணிகள் வாக்குவாதம்

சென்னை: சென்னையில் இருந்து நேற்று அந்தமான், திருச்சி மற்றும் டெல்லி செல்ல இருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்து திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் அந்தமான் செல்ல 64 பயணிகள் வந்திருந்தனர்.
Advertising
Advertising

ஆனால், விமானம் சற்று தாமதமாக புறப்படும் என்று பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் தொடர்ந்து காத்திருந்தனர். அதன்பின்பு 6 மணியளவில் நிர்வாக காரணங்களுக்காக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது, காலை 10.30 மணிக்கு அந்தமான் செல்லும் மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா தரப்பில் பயணிகளிடம் அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, அதிகாலை 5.45 மணிக்கு திருச்சி செல்ல இருந்த ஏர் இந்தியா அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் திருச்சி செல்ல வந்திருந்த 62 பயணிகளும் மாற்று விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்பிறகு, காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து 117 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த மற்றொரு ஏர் இந்தியா விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த பயணிகள் எங்களை மாற்றுவிமானத்தில் அனுப்பிவைக்க வேண்டும் என்று ஏர் இந்தியா அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு பெங்களூரில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம், சென்னைக்கு பகல் 12 மணிக்கு வந்து இங்கிருந்து 117 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு டெல்லி சென்றது.

இதுகுறித்து ஏர் இந்தியா நிர்வாகத்திடம் கேட்டபோது, நிர்வாகம் சம்பந்தப்பட்ட நடைமுறை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். ஆனால், விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், விமானங்களை இயக்குவதற்கு விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் பற்றாக்குறை காரணமாக குறைந்த அளவு பயணிகள் கொண்ட இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: