×

ஜெயங்கொண்டம் பகுதியில் கோழிக்கொண்டை மலர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

ஜெயங்கொண்டம், மார்ச் 15:  ஜெயங்கொண்டம் பகுதியில் கோழிக்கொண்டை மலர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சோளம், கம்பு, நெல், கரும்பு, செடி முருங்கை இப்படி பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு பயிரிடுபவர்களில் ஒரு சிலரே அதிக லாபம் அடைந்துள்ளனர். மற்றவர்கள் சொற்ப லாபத்திலும், நஷ்டத்தையும் அடைந்துள்ளனர். தற்போது விவசாயிகள் காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைகளை புரிந்துகொண்டு மாற்று விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்யும்போது அதிக லாபத்தை பெற முடியும் என்ற நம்பிக்கையோடு மலர் விவசாயத்தில் இறங்கி பயிரிட்டு வருகின்றனர். தற்போது ஜெயங்கொண்டம் பகுதியில் புதுக்குடி, கரைமேடு, தேவனூர், கல்வெட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பங்கி கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு வருகின்றனர். இவற்றில் கோழிக்கொண்டை பூவானது குறைந்த செலவில் அதிக லாபம் தரும் என சில விவசாயிகள் கூறி பயிரிட்டு வருகின்றனர்.

 இந்த பூவின் விதைளை நாற்றங்கால் கொண்டு உருவாக்கி, அதனை போதுமான இடைவெளி விட்டு நட்டு வைத்து, முறையாக பராமரித்து வரும் நிலையில், 40வது நாளில் பூக்கும் நிலையை அடைந்து விடுகிறது. தொடர்ந்து 90 நாட்கள் வரை பூ கிடைக்கிறது. குறைந்த பட்சமாக ஒரு கிலோ பூ ரூ.20 என வியாபாரிகள் எடுத்து கொள்கின்றனர். பண்டிகை நாட்களில் அதிகபட்சமாக ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் குறைவாக இருக்கும்போது, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பப்படும். பூக்கள் அதிக விளைச்சல் இருக்கும் போது கும்பகோணம், திருச்சி பகுதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோழி கொண்டை பயிரிடும் விவசாயி தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் கூறியதாவது: தண்ணீர் பற்றாக்குறையை போக்கி தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களை கண்டறிந்து அதனை சாகுபடி செய்வது முதல் யுக்தி. அதில், குறுகிய காலத்தில் விளைச்சல் கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்வதால் விரைவில் குடும்பத்துக்கு தேவையான வருவாயை பெற முடியும். குறிப்பாக கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் ஆண்டு பயிர்களாகும். அதிலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகமாக இருந்தாலும், அதற்கு ஒருவருடம் நமது உழைப்பை தரவேண்டும். அதற்கு அதிகளவு தண்ணீர் வேண்டும்.

குறுகிய கால பயிர்களை நாம் பயிரிடும்போது குறைந்த நாட்களில் வருவாயை ஈட்டுவதோடு செலவும் குறைவாகவே ஆகும். மலர் சாகுபடியில் விற்பனை என்பது பெரியம் விஷயம் அல்ல. பண்டிகை நாட்களை கணக்கில் கொண்டு மலர்கள் சாகுபடியில் விவசாயிகள் இறங்க வேண்டும். கோயில் திருவிழா காலங்கள், சுபமுகூர்த்த நாட்கள் அதிகமுள்ள மாதங்களை கணக்கில் கொண்டு அப்போது பூக்கள் அறுவடைக்கு வரும் நிலையில் பயிர் சாகுபடி செய்யும்பட்சத்தில் அதிக லாபம் பெற முடியும். மேலும், விற்பனையும் எளிமையாகும். குறைந்த அளவு நிலம் கொண்டவர்களுக்கு இதுமுற்றிலும் சாத்தியமாகும். அதிகளவு நிலம் வசதி கொண்டவர்கள் குறைவாக இடங்களில் மலர்சாகுபடி செய்தால் மட்டுமே, அதனை பறித்து எடுத்து விற்பனைக்கு கொடுக்க சரியாக இருக்கும். மேலும், பயிர்கள் சாகுபடியில் சந்தேகங்கள் இருப்பின் அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பெறலாம். சொட்டு நீர்ப்பாசனம் கொண்டு பயிரிடும்போது குறைவாக தண்ணீர் இருந்தாலே போதுமானதாகும். நாள் ஒன்றுக்கு 20 முதல் 50 கிலோ வரை பூக்கள் தற்போது அறுவடை செய்து வருகின்றேன். அதிகமாக பூக்கள் இருக்கும் போது, ஒரு சிலரை வேலைக்கு அழைப்போம். குறைவாக பூக்கள் இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் உள்ள 2, 3 நபர்களே பறித்து விடலாம். இதேபோல், சம்மங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களையும் விவசாயிகள் பயிரிடலாம். குறைந்த நாட்களில் அதிக மகசூல் கிடைப்பதோடு, நமக்கு பணத்தட்டுப்பாடும் ஏற்படாது. தினந்தோறும் கைக்கு பணம் கிடைத்தது போல இருக்கும் என மகிழ்ச்சியோடு கூறினார்.

Tags : area ,Jayankondam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...