ஒரத்தநாடு பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து வாடகைக்கு விடும் அவலம்

ஒரத்தநாடு, மார்ச் 15: ஒரத்தநாடு பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து சிலர் வாடகைக்கு விட்டு பணம் வசூலிப்பது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்திலேயே மிக முக்கியமான நகராக கருதப்படும் ஒரத்தநாட்டில் பைபாஸ் சாலையில் பெரியார் சிலையில் துவங்கி அரசு மகளிர்; கலைக்கல்லூரி வளாகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகம், நில அளவையர் பயிற்சி மைய வளாகம், புதிய நீதிமன்ற கட்டிட வளாகம், நீதிபதி குடியிருப்பு மற்றும் நூலக வளாகம். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம் உள்ளது. இந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர பகுதிகள் ஒரத்தநாடு அதிமுகவினராலும், கட்டப்பஞ்சாயத்து செய்வோர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில் சில மணல் கொள்ளையர்களிடமும், திருட்டு கட்டிட பொருள் விற்பனையாளர்களிடமும் வாடகைக்கு விடப்பட்டு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்துக்கு வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பால் அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் அரசு வளாகங்கள் பிரச்னைக்குரிய பகுதிகளாக மாறும். இந்த சாலையோரங்களில் உணவு கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இப்பகுதியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: