×

போக்குவரத்து போலீசாருக்கு சிறப்பு தொப்பி

விழுப்புரம், மார்ச் 15:  விழுப்புரத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்கும் திட்டத்தை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 102 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் இளநீர், தர்பூசணி, பப்பாளி, மோர், பழச்சாறு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பானங்களை மக்கள் பருகி வருகிறார்கள். இந்த நிலையில், வெயில் காலத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆண்டுதோறும் காவல்துறை சார்பில் நீர்மோர், குளிர்ச்சி தரக்கூடிய தொப்பிகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது வெயில் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தை தணிக்கும் வகையில் விழுப்புரம் நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நீர்மோர், எலுமிச்சை சாறு வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் நடந்தது. எஸ்பி ஜெயக்குமார் இதனை துவக்கி வைத்தார். மேலும் வெயிலின் பிடியிலிருந்து தப்பித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் சிறப்பு தொப்பிகள், கூலிங்கிளாஸ் கண்ணாடிகளையும் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் டிஎஸ்பி திருமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை