‘உங்களது வாக்கு, உங்களது குரல்’

புதுச்சேரி, மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 34 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிகளை புதுவை மாநில தேர்தல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் துறை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரி மக்களின் வீடுகளுக்கு  தேர்தல் குறித்த விழிப்புணர்வை கொண்டு செல்லும் வகையில் மாவட்ட தேர்தல்  துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே உதவியுடன் பால் பாக்கெட்டுகளில்  தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு   நுகர்வோர்களுக்கு கடந்த சில தினங்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் “உங்களது வாக்கு உங்களது குரல் மறவாதீர் 18.4.2019 அன்று வாக்குப்பதிவு... மாவட்ட  தேர்தல் அதிகாரி,  புதுச்சேரி... என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

பாண்லே  பால் பாக்கெட்டுகள்  ஒவ்வொன்றிலும் உற்பத்தி தேதி விவரத்துடன் தேர்தல்  குறித்த விழிப்புணர்வு  வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளது. வாரம் 3 முறை  இந்த வாசகங்கள் மாறிமாறி வரும் வகையில் பாண்லே  நிறுவனத்துடன் இணைந்து தேர்தல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து  மாவட்ட தேர்தல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பால்  விளங்குகிறது. பெரும்பாலானோர் பாக்கெட் பாலை  வாங்கி பயன்படுத்துவதால், அவர்களின் வீடுகளுக்கே தேர்தல் குறித்த  விழிப்புணர்வை கொண்டு செல்ல  திட்டமிட்டு முதல்கட்டமாக பாண்லே பால்  பாக்கெட்டுகள் மூலம் இப்பணியை  தொடங்கியுள்ளோம். தினமும் பல்லாயிரக்கணக்கான  மக்களை விழிப்புணர்வு  வாசகங்கள் சென்றடைவதால் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றனர்.

இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலிலும், பாண்லே பாக்கெட்டுகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: