×

3வது முறையாக நாக் கமிட்டி இன்றும், நாளையும் ஆய்வு

புதுச்சேரி, மார்ச் 15: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய இயக்குநர் அறவாழி இருசப்பன் அளித்த பேட்டி: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 1989ல் தொடங்கப்பட்டது. 2007-2008 கல்வியாண்டு முதல் இது தன்னாட்சி நிறுவனமாக இயங்குகின்றது. 2012- 2013ம் கல்வியாண்டு முதல் விருப்பத் தேர்வு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, வேதியியல், இயற்பியல், வரலாறு, பொருளாதாரம், கணினி, தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்கு முதலிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் 65 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். 886 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில் 106 பேர் முனைவர் பட்ட ஆய்விலும், 57 பேர் இளம் முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்துக்கு தேசிய தரமதிப்பீட்டுக் குழு (நாக் கமிட்டி) 2005ல் முதன்முறையாக வருகை தந்து மதிப்பீடு செய்தது. மீண்டும் 2013ல் மறு  மதிப்பீடு செய்து ஏ தகுதிச் சான்றிதழ் கொடுத்து, ஆற்றல்சார் உயர்கல்வி நிறுவனம்  என்னும் உயர்தகுதியினையும் வழங்கியது. மூன்றாவது முறையாக இந்த ஆண்டு தேசியத் தரமதிப்பீட்டுக் குழு, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்திற்கு இன்றும், நாளையும் (15, 16 ஆகிய தேதிகள்) வருகை தர உள்ளது. தேசியத் தரமதிப்பீட்டுக் குழு வல்லுநர்கள், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் உள்ள கட்டமைப்பு வசதிகள், மேற்படிப்பு மையத்தில் நடைபெறும் ஆய்வுகள், நூலக வசதி, விளையாட்டு வசதிகள், பேராசிரியர்களின் பணிகள், மாணவர்களின் கல்வித்திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதுடன், அலுவலக ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தார்,

முன்னாள் மாணவர் சங்கத்தினர் சார்ந்த சந்திப்புகளை நடத்த உள்ளனர். இவை அனைத்தையும் மதிப்பீடு செய்து, நிறைவாக இந்த நிறுவனத்திற்கு உரிய தரத்திற்கான அங்கீகார சான்றினை பரிந்துரை செய்வார்கள். இச்சான்றின் அடிப்படையில் எதிர்காலத்தில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்திற்கான நிதி உதவிகள் 2 மடங்காக அரசிடமிருந்து கிடைக்கும். இதன் மூலம் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க முடியும். 2020-21ல் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், மகளிர் விடுதி மற்றும் அனைத்து படிப்புகளுக்கும் தனித்தனி கட்டிடங்களை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்நிலையில் நாக் கமிட்டியை வரவேற்கும் வகையில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Knock Committee ,
× RELATED நாக் கமிட்டி வருகையையொட்டி சேலம்...