×

சாலையோர கடைகளின் பெயர் பலகைகள் அகற்றம்

கடலூர், மார்ச் 15: கடலூர் நகரில் சாலையோரம் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை அகற்றியதால் கடைக்காரர்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பேனர்கள் வைக்கக்கூடாது, சுவர் விளம்பரங்கள் இருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மாவட்ட தேர்தல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலூர் நேதாஜி சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை நகராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்கள் அகற்றினர். இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சொந்த இடத்தில் இருக்கும் பெயர் பலகைகளை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நகராட்சி அனுமதி இல்லாமல் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள்அகற்றுவதை வரவேற்கிறோம்.

ஆனால் சொந்த இடத்தில் இருக்கும் கடை பெயர் பலகைகளை ஏன் அகற்ற வேண்டும். நகராட்சி தரப்பினர் ஒருதலைப்பட்சமாக கடைக்காரர்களிடம் வசூல் வேட்டைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்டித்து வணிகர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்படும். மேலும், தேர்தல் தொடர்பான பணிகளும் புறக்கணிக்கப்படும் என்றனர்.மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை நகராட்சி ஊழியர்கள் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையோரம் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : roadside stores ,boards ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...