×

பல கோடி செலவில் துவங்கப்பட்ட வெள்ளாறு புனரமைப்பு பணி முடக்கம்

முஷ்ணம், மார்ச் 15: முஷ்ணம் நகரம், கிராம பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் குடிநீர் மற்றும் விவசாயத்தின் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, உலக வங்கி உதவியுடன் கடலூர் மாவட்டம் நல்லூர் வட்டத்தில் ஒரு ஏரி, விருத்தாசலம் வட்டத்தில் நான்கு ஏரி, கம்மாபுரம் வட்டத்தில் இரண்டு ஏரி, காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மூன்று ஏரி என வெள்ளாறு உபவடிநில பகுதியின்கீழ் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் பணி ரூ.498.42 லட்சம் 2017-18ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முஷ்ணம் அருகே குணமங்களம் ஏரி ரூ.18.80 லட்சத்தில் பணி நடைபெறும் பொருட்டு ஏரி கரை சீர் செய்யப்பட்டது.
ஆனால் முழுமையாக பணி நடைபெறாமல் பணி கிடப்பில் போடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த ஆண்டு பருவமழை போதியளவு இல்லை. ஏரியும் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் இன்றி ஏரி வறண்டு விழல், காட்டாமணக்கு ஆகியன முளைத்துள்ளது.

 இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய பம்புசெட்டுகள், போர்வெல்கள் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இந்த ஏரி குணமங்களம், மதகளிர்மாணிக்கம், கள்ளிப்பாடி, பூண்டி உள்ளிட்ட 5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. 5000 ஹெக்டேர் பாசன வசதி கொண்ட பெரிய ஏரியாகும். எனவே விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...