×

பழமை வாய்ந்த மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை, மார்ச் 15: ராமநாதபுரத்தில் உள்ள அச்சுந்தன்வயலில் இருந்து பட்டினம்காத்தன் வரை சாலையில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்ட தடைகோரிய வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரத்தில் உள்ள சையது அம்மாள் அறக்கட்டளையை சேர்ந்த பாபு அப்துல்லாஹ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.எச்.49 சாலை அச்சுந்தன்வயலில் இருந்து பட்டினம்காத்தன் வழியாக செல்கிறது. இச்சாலை ராமேஸ்வரத்தை இணைக்கும் சாலையில் முக்கியமான சாலையாகும். இச்சாலை ஓரங்களில் கடந்த 2001ம் ஆண்டு பல மரங்கள் நடப்பட்டு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு வளர்ச்சியடைந்த மரங்களை வெட்டுவதற்காக ராமநாதபுரம் நகராட்சி துறையினர் குறியீடு வைத்த நிலையில் 2013ம் ஆண்டு ஐகோர்ட் மதுரை கிளை, மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டலாம் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் 5ம் தேதி மாவட்ட கலெக்டரிடம் மரங்களை வெட்டுவது குறித்து மனு அளித்தோம். அச்சுந்தன்வயலில் இருந்து பட்டினம்காத்தன் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் 150 மரங்களில் 80 முதல் 90 மரங்களை வெட்டுவதற்கு குறியீட்டுள்ளது. இதனால் அப்பகுதில் பறவைகள் மரங்களில் ஒதுங்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதோடு, வெயில் காலத்தில் வாகன ஓட்டிகள் நிழலில் ஒதுங்க முடியாத நிலை ஏற்படும். எனவே ராமநாதபுரத்தில் உள்ள அச்சுந்தன்வயலில் இருந்து பட்டினம்காத்தான் சாலையில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.விசாரித்த நீதிபதிகள், “மரங்களை வெட்டுவது குறித்து இறுதி தீர்ப்பு வரும் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை