வண்டியூரில் மனையை அளந்து ஒப்படைக்க கோரிய வழக்கு கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, மார்ச் 15: மதுரையில் பட்டா வழங்கப்பட்ட 349 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு மனையை அளந்து ஒப்படைக்க கோரிய வழக்கில் மாவட்ட கலெக்டர் 2 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை வண்டியூரை சேர்ந்த முத்துப்பண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில்  தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள தீர்த்தக்காடு அருகே ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கா கடந்த 1987ம் ஆண்டு 47 மனை பட்டாக்களும், 1995ம் ஆண்டு 302  மனை பட்டாக்களும் என மொத்தம் 349 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. இவை ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், மேலூர் முன்சீப் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில்  ஆகிரமிப்பாளர்களை மாவட்ட நிர்வாகம் கடந்த 2014ம் ஆண்டு தீர்த்தக்காட்டிலிருந்து வெளியேற்றி, மதுரை அருகேயுள்ள சக்கிமங்கலம் பகுதியில் மாற்று இடம், அடிப்படை வசதிகள்  செய்து கொடுத்து குடியமர்த்தியுள்ளனர். தீர்த்தக்காடு ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கான மனையிடங்களை 35 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு மாற்று மனையிடம் கொடுத்து, காலி செய்து சுமார் நான்கரை ஆண்டுகள் கடந்துள்ளது.

இந்நிலையில், பட்டா வாங்கிய ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு மனையிடங்களை அளந்து ஒப்படைப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துவதால் பிழைப்பு தேடி வேலைபார்க்கும் இடங்களில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, 349 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில் மனையை அளந்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: