×

தேர்தல் சோதனைகளில் ஈடுபடும் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஎஸ்


திண்டுக்கல், மார்ச் 15: மக்களவை தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை செல்லும் வாகனங்களில் ஜபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 10ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகளில் வாகன பரிசோதனையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்களில் வாகன பரிசோதனை நடந்து வருகிறது.பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தாசில்தார் தலைமையில் ஒரு எஸ்ஐ, இரண்டு போலீசார், ஒரு வீடியோ கிராபர் இப்படையில் பணிபுரிவர். வாகன சோதனையிலும் ஈடுபடுவர். இந்த பறக்கும்படை செல்லும் 12 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் எங்கு செல்கிறது என்பது குறித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது, தேர்தலுக்கான பணிகளை படிப்படியாக செய்து வருகிறோம். கடந்த தேர்தல் முதல் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால் பறக்கும்படை வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதனால் தவறுகள் கட்டுப்படுத்தப்படும். புகார்கள் கூறப்படும் பகுதிக்கு செல்கிறார்களா என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அறியமுடியும் என்றார்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்