தேர்தல் விதி எதிரொலி கட்சி கொடிக்கம்பங்கள் நிலக்கோட்டையில் அகற்றம்

செம்பட்டி மார்ச் 15: தேர்தல் நடத்தை விதி எதிரொலியாக நிலக்கோட்டையில் கட்சிக் கொடிக்கம்பங்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் நிலக்கோட்டை நாலு ரோடு, நிலக்கோட்டை மெயின் பஜார், நிலக்கோட்டை பஸ் நிலையம், மாரியம்மன் கோவில் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தஜ. இதனை அகற்றிக்கொள்ள நேற்று முன்தினம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் பானு உத்தரவிட்டிருந்தார். ஆனால் நிலக்கோட்டை பேரூராட்சியில் எந்த கட்சியினரும் தாங்களாக முன்வந்து கட்சி கொடி கம்பங்களை அகற்றவில்லை. இதையடுத்து நேற்று நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் அனைத்து கொடி கம்பங்களை அகற்றினர். நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர்.இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அனைத்து கட்சிக் கொடி கம்பங்களையும் ஒரே நேரத்தில் அகற்றியதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: