×

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் மூடப்பட்ட தலைவர்கள் சிலைகள் திடீர் திறப்பு நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவில், மார்ச் 15: பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து நாகர்கோவிலில் உள்ள தலைவர்களின் சிலைகள் துணிகளால் மூடப்பட்டு இருந்தது. அவ்வாறு மூடப்பட்ட சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனையொட்டி அரசு, தனியார் சுவர்களில் இருந்த விளம்பரங்கள் நகர பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. கொடிகள் கழற்றப்பட்டதுடன் விதிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் கொடிக்கம்பங்களையும் வெட்டி அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டனர். நகராட்சி பணியாளர்கள் தொடர்ச்சியாக இந்த தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதை போன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பம் அகற்றப்பட்டது. பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் உட்பட நகர பகுதிகளில் உள்ள சிலைகள் சாக்கு, பிளாஸ்டிக் பைகளை கொண்டு மூடப்பட்டிருந்தன. ஆனால் நேற்று காலையில் இந்த சிலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது அது தொடர்பான விபரங்கள் தங்களுக்கு தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மறைந்த தலைவர்கள் சிலையை மூடக்கூடாது என்று உத்தரவு இருந்து வருகிறது. அதன் காரணமாகத்தான் அவ்வாறு மூடப்பட்ட சிலைகள் திறக்கப்பட்டன. நேற்று இரவு (நேற்று முன்தினம்) இரவு 7.30 மணிக்கு மூடிவைத்திருந்த சிலைகளை திறந்துவிட்டோம்’ என்றார். இது தொடர்பாக திராவிடர் கழக மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் கூறுகையில், ‘நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலையை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அதிகாரிகள் வந்து மூடி வைத்திருந்தனர். நாகர்கோவில் சப் கலெக்டரிடம் இது தொடர்பாக நான் பேசினேன்.
தேர்தல் விதிப்படி மூடியதாக அவர் கூறினார். நான் பெரியார் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். அவரது சிலையை மூடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்து அது தொடர்பான கோர்ட் உத்தரவையும் சப் கலெக்டருக்கு அனுப்பினேன். பின்னர் தாசில்தார், ஆர்.ஐ., ஆகியோருக்கு தெரிவித்து அவர்கள் வந்து மூடப்பட்ட சிலையை திறந்து வைத்தனர் என்றார்.
வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு மட்டுமா ‘1950’?

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மறுநாள் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ‘1950’ என்ற எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம் என்று கூறினார். ஆனால் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1950 என்ற எண்ணை அழைத்தால் அதில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று ஒலிப்பதிவு வாயிலாக கூறப்படுகிறது. ஆனால் இணைப்பில் வருகின்ற அலுவலரோ எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான புகார்களை மட்டுமே பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் எங்களிடம் பதிவு செய்ய இயலாது என்று தெரிவிக்கிறார். இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : leaders ,Nagercoil ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...